சோ அவர்களின் எங்கே பிராமணன் கேள்வி பதிலிலிருந்து...
கேள்வி : ஒருவருக்காக இன்னொருவர் பிரார்த்தனை செய்தால், முதலாமவரின் குறைகளை கடவுள் களைந்து விடுவாரா?
சோ: ஹிந்து மதம், இறைவனை மிகவும் நெருக்கமானவராகப் பார்க்கிறது. ஹிந்து மதத்தில், கடவுளை நாம் அன்னியப்படுத்தி, எங்கோ வைத்து விடவில்லை. கடவுள் நமது சினேகிதன் மாதிரி. கடவுள் சினேகிதனா என்று கேட்டால், ஆமாம்!
மற்ற பல மதங்களைப் போல ஹிந்து மதம், கடவுளை எட்ட முடியாதவராக நினைக்கவில்லை. நண்பனாக, உறவினனாக; குருவாக, சீடனாக; தந்தையாக, மகனாக; சினேகிதனாக, காதலனாக; எஜமானனாக, வேலையாளாகப் பார்க்கப்படுகிறான் இறைவன்.
ஏனென்றால் உண்மையான பக்தனுக்கு அந்த உரிமை இருக்கிறது. பக்தி அவ்வளவு வலிமை உடையது.
இதனால்தான் கடவுளுக்கு கல்யாண உற்சவம் செய்து பார்க்கிறோம்; தாலாட்டி தூங்க வைக்கிறோம்; பாட்டு பாடி மேளம் கொட்டி, துயில் எழுப்புகிறோம்; நீராட்டுகிறோம்; புத்தாடை அணிவிக்கிறோம்.கடவுளுக்கும், பக்தியுள்ள மனிதனுக்கும் இவ்வளவு நெருக்கம் இருப்பதால், அவரிடம் உரிமை எடுத்துக் கொண்டு, இன்னொருவருக்காக வேண்டுகிறோம். இதை உண்மையான பக்தன் செய்கிறபோது அதற்கு பலன் கிடைக்கிறது.
நீங்கள் என் சினேகிதர். உங்களிடம், ஒருவருக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும். அவர் என்னிடமும் கூறி, உங்களிடம் கேட்டுக் கொள்ளச் சொல்கிறார். நான் உங்களிடம் அவருடைய காரியத்தை விளக்கி, அவருக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டு; அதனால் நான் சொல்கிற கோரிக்கையை நீங்கள் ஏற்கிறீர்கள். நீங்கள் ஒரு மனிதர். உங்களுக்கு இருக்கிற கருணை, இறைவனுக்கு இருக்காதா?
ஆதி சங்கரர் வரலாற்றில் வருகிற ஒரு அருமையான நிகழ்ச்சி இதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. சங்கரர் அப்போது சிறு பையன். பிரம்மச்சாரி. பிட்சைக்காக ஒரு வீட்டிற்குப் போகிறார். அந்த வீடோ, ஒரு பரம தரித்திரனுடைய வீடு. அந்த மனிதனும் வெளியே போயிருக்கிறான். வீட்டில் அவனுடைய மனைவி மட்டும் இருக்கிறாள்.
சங்கரர் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று குரல் எழுப்ப, அந்த அம்மாள் செய்வதறியாமல் திகைக்கிறாள். ஏனென்றால், பிட்சை போடுவதற்கு வீட்டில் எதுவுமே இல்லை. வாயிலில் வந்து நிற்கிற பிரம்மச்சாரியோ, பெரும் தேஜஸ் உடையவராகக் காட்சியளிக்கிறான். வெறும் கையுடன், அந்தச் சிறுவனை திருப்பி அனுப்ப அந்தப் பெண்மணியின் மனம் இடம் கொடுக்கவில்லை. தவிக்கிறாள்.
உங்களைப் போன்றவர்களுக்கு தகுந்த உபசாரம் செய்பவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்’ என்று சங்கரரிடம் கூறிவிட்டு, அந்தப் பெண்மணி, வீட்டில் ஏதாவது இருக்காதா என்று தேடினாள். ஒரு பானையில், வாடிப் போன ஒரு நெல்லிக்கனி இருந்தது. அன்றைய பொழுதுக்கு அவர்கள் வீட்டில் அதுதான் உணவு; அவ்வளவு ஏழ்மை. கையில் கிடைத்த அந்த நெல்லிக்கனியை மிகவும் தயக்கத்துடனும், இவ்வளவு அற்பமான பொருளை பிட்சையிடுகிறோமே என்ற குற்ற உணர்வுடனும், அந்தப் பெண்மணி, சங்கரருக்கு பிட்சையாகத் தந்தாள்..
சங்கரர் நிலைமையைப் புரிந்து கொண்டார்; அந்தப் பெண்மணியின் நல்ல மனதையும் அவர் தெளிவாகவே தெரிந்து கொண்டார். அவளுக்காக அவர் மனம் இளகியது.
அந்தக் குடும்பத்தினரின் வறுமையை நீக்குமாறு, அவர் மனமுருகி, மஹாலக்ஷ்மியை வேண்டிக் கொண்டார்.
அப்போது அவர் துதித்த ஸ்லோகங்கள், ‘கனகதாரா ஸ்தோத்ரம்’ என்ற பெயரைப் பெற்றன. அவர் துதியைக் கேட்டு மகிழ்ந்த மஹாலக்ஷ்மி, அவர் முன் தோன்ற, சங்கரர் விழுந்து வணங்கி நிற்க, தேவி பேசினாள்:
‘குழந்தாய்! இவர்கள் முற்பிறவியில் எந்த நன்மையையும் செய்யவில்லை. அப்படியிருக்க, அவர்களிடம் நான் கருணை காட்ட வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது எவ்வாறு?’சங்கரர் சொன்னார்: ‘தாயே! இப்போது இந்த நெல்லிக்கனி, இந்தப் பெண்மணியால் எனக்கு பிட்சையாக அளிக்கப்பட்டது. என் மீது கருணை வைத்து இந்த தானத்திற்கு நீ பலன் அளிக்கக் கூடாதா?’– இவ்வாறு சங்கரர் வற்புறுத்தி வேண்டிக் கொண்ட பிறகு, மனமிரங்கிய மஹாலக்ஷ்மி, தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழியச் செய்து, அந்த வீட்டையே நிரப்பி விட்டாள். அந்தக் குடும்பத்தின் வறுமை நீங்கியது.இப்படி, சங்கரர் வேண்டிக் கொண்டபோது, ஏதோ ஒரு ஏழைக் குடும்பத்துக்கு தெய்வம் கருணை காட்டவில்லையா?
அதே போலத்தான், ""உண்மையான பக்தி உணர்வுடன்"" நமக்காக ஒருவர் வேண்டிக் கொண்டால், நமக்கு நன்மை கிட்டும்.
No comments:
Post a Comment