Saturday 22 October 2022

அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே!

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இன்னொரு சிலை அதே மாதிரி இருப்பதை கவனித்தார். உடனே பணக்காரர், ”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள்? இல்லை... இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார். சிற்பி சிரித்துக்கொண்டே, “இல்லை ஐயா. கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது...” என்றார். பணக்காரர் ஆச்சரியத்துடன், ”என்ன சொல்றீங்க... மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!” எனக் கேட்டார். “அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது... பாருங்கள்” என்றார் சிற்பி. “ஆமாம்!.அது சரி.... இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார் பணக்காரர். “இது கோவில் கோபுரத்தில், நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை!” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி. பணக்காரர் வியப்புடன், ”நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய்... முட்டாள்!” என்றார். “அந்த சிலையில் கீறல் இருப்பது, எனக்கு தெரியுமே!” எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.... அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் என்றார் சிற்பி. நீதி: அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே. உன் மனத்திருப்திகாக வேலை செய்!

Monday 17 October 2022

போர் பயிற்சி

ஒரு அரசர் தன் மகனுக்கு போர் பயிற்சி கொடுப்பதற்காக ஒரு பயிற்சியாளரிடம் சேர்ப்பிக்கிறார். ஆறு மாதங்கள் கழித்து வருமாறு பயிற்சியாளர் சொல்கிறார். ஆறு மாதங்கள் கழித்து ஞாபகமாக அரசரும் பயிற்சி பாசறைக்கு செல்கிறார். அங்கு அவரது மகன் மிக ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறான். அவனது தோள்கள் திணவெடுத்து இருக்கின்றன. அங்கிருக்கும் தூண்கள், பலகைகள் என்று அனைத்தையும் அவன் கைகள் பதம் பார்த்திருந்தன. அவனது உடலெங்கும் தழும்புகளால் நிறைந்திருந்தன. மிகுந்த திருப்தியுற்ற அரசர் பயிற்சியாளரிடம் சென்று நன்றி கூறி தனது மகனை அழைத்து செல்லலாமா என்று கேட்டார். அவன் இன்னும் தயாராகவில்லை இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். அரசரும் குழப்பத்துடன் சரி என்று சொல்லி சென்றுவிட்டார். அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சென்றார். அப்போது அவரது மகன், மாமிச மலை போல் இருந்த, அந்த பயிற்சி பாசறையிலேயே ‘மிகச்சிறந்த’ வீரனுடன் மோதிக்கொண்டிருந்தான். மாமிச மலை’ தான் வெல்வான் என்றிருந்த கணத்தில், சட்டென்று அவனை புரட்டிப் போட்டு வீழ்த்தி, சீற்றத்துடன் கர்ஜனை செய்தான் மகன். முகமெல்லாம் பூரிப்புடன் பயிற்சியாளரை பார்த்து, “இப்போது அவனை அழைத்து செல்லலாமா” என்றார். இல்லை அவன் இன்னும் தயாராகவில்லை, இன்னும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள்” என்றார். தயக்கத்துடன் விடைபெற்ற அரசர் குழப்பத்துடன் நாடு சேர்ந்தார். அடுத்த ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பயிற்சி பாசறைக்கு வந்தார். அப்போது அவரது மகன் சண்டை நடக்கும் இடத்தில இருந்து விலகி நண்பர்களுடன் மழையை ரசித்துக்கொண்டிருந்தான். அரசர் பயிற்சியாளரை சந்தித்த முதல் நிமிடத்திலேயே “இப்போது அவன் தயாராய் இருக்கிறான், நீங்கள் அழைத்து செல்லலாம்” என்றார். அவன் ஆக்ரோஷமாக பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவன் தயாரில்லை என்று சொன்ன நீங்கள், அவன் அமைதியாய் அமர்ந்திருக்கும் போது மட்டும் அழைத்து செல்ல சொல்கிறீர்களே ஏன்” என்று என்றார். அரைகுறையின் உச்சம் தான் ஆக்ரோஷம். வீரத்தின் உச்சம் என்றும் அமைதி தான்” என்றார் பயிற்சியாளர். புரியவில்லை” என்றார் அரசர். எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ, எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான். எப்பொழுது ஒருவனுக்கு மற்றவர் மேல் அன்பு வருகிறதோ, எப்பொழுது ஒருவன் முழு திறமையையும் அடைகிறானோ அப்பொழுது அவன் அமைதியில் ஐக்கியமாவான். அது தான் ஒரு தலைவனுக்குரிய தகுதி. உங்கள் மகன் நாடாளும் தகுதி பெற்று விட்டான் அவனை அழைத்து செல்லுங்கள்” என்றார்

Sunday 16 October 2022

கடவுள் வந்தார்.

*இன்று ஒரு தகவலுடன்*. #கடவுள்_வந்தார்...! என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..! என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.. முதல் மனிதன்.. எனக்கு கணக்கிலடங்கா காசும், பெரிய பிஸினஸும் வேண்டும்..! இரண்டாம் மனிதன்.. நான் உலகில் சிறந்தோங்கி பெரிய பதவியை அடைய வேண்டும்..! மூன்றாம் மனிதன்.. உலப்புகழ் பெற்ற நடிகர் போல் மிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..! நான்காம் மனுஷி.. உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..! உலகமே அதில் மயங்க வேண்டும்..! இப்படி.. இன்னும் ஐந்து பேரும் தமக்கு வேண்டியதைக் கேட்டனர்..! கடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..! பத்தாவது மனிதன் கேட்டான்: உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ, அந்த நிலை எனக்கு வேண்டும்..! ஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..! மனநிம்மதி, மன நிறைவு… நாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..? விரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..? கடவுள் அந்த ஒன்பது பேரிடமும் நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..! நீங்கள் போகலாம்..! என்று கூறிவிட்டு, பத்தாவது மனிதனைப் பார்த்து நீ இரு..! நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.. சிறிது நேரம் கழித்து வருகிறேன்.. என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..! இப்போது, அந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..! கடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்.. என்ன தரப் போகிறார் என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..! துடித்தது..! அவர்கள் விரும்பியது எதுவோ அது கையில் கிடைத்த பின்னும், இன்னும் எதுவுமே கிடைக்காத அந்த பத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..! நேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..! தாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..! அதை அனுபவிக்க மறந்தனர்..! அப்போதே, அந்த இடத்திலேயே, அவர்கள் நிம்மதி குலைந்தது..! மனநிறைவு இல்லாமல் போனது..! பத்தாவது மனிதன், கடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..! கடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே அவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..! நாம் பத்தாவது மனிதனா..? இல்லை பத்தாது என்கிற மனிதனா..? முடிவு நம்மிடமே.. *எண்ணும் எண்ணங்களே நம்மை தீர்மானிக்கும்.*🌹🙏