Wednesday, 7 October 2020

 '' பாற்கடலை கடைய அமுதம் வருமா?

பைத்தியக்காரத்தனம்.

அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம் - யப்பா முடியலடா சாமி.

இதைவிட ஒரு காமெடி என்னன்னா

அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம். கேட்டா அது விஷ்னுவோட அவதாரமாம். அவ்ளோ பெரிய ஆமையை Discovery சேனல்ல கூட காமிக்கலையே.

தேவர்களும்,அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம்.

அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம். 

சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். 

விஷத்த குடிச்சா சாமி சாகுமா?இல்ல அப்படி செத்தா அது சாமியா?

அப்புறம் அமுதம் வந்துச்சாம்.  அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.

இப்படி ஒரு Fantacy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல. இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு இருக்க. '' 

---  இப்படி தன் இரவல் அறிவையெல்லாம் ஒன்று திரட்டி ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியக் கேட்டு விட்டதாகவும் 

என்னை மட்டம் தட்டி விட்டதாகவும் இருமாந்திருந்தார் நண்பர் ஒருவர்(பாவம் சமீபத்தில்தான் பகுத்தறிவு பால்வாடியில் சேர்ந்திருப்பார் போல).

🌿🌿

நான் நிதானமாக சொன்னேன்... 

''இந்து கலாச்சாரத்தில் சொல்லப்படுகின்ற கதைகள் எல்லாம் உருவகங்கள்.

மிகப்பெரிய தத்துவங்களை எல்லாம் குழந்தைக்கு கூட புரியும் வண்ணம் புனையப்பட்ட உருவகக்கதைகள் இவை.

இவற்றை  அப்படீயே எடுத்துக்கொண்டு வாதிடுவது அறிவுடைமை ஆகாது.

அதனால் Encoding செய்யப்பட்ட உருவகங்களை Decoding செய்தால் போதும். பொருள் அதுவாகவே விளங்கும்.

சரி. இப்போது இந்த பாற்கடல் கதையை Decode செய்கிறேன்.

பாற்கடல் - குண்டலினி சக்தி

மேருமலை - முதுகுத்தண்டு

வாசுகி பாம்பு - மூச்சுக்காற்று

(உஷ் ...உஷ்னு சத்தம் வருதா)

தேவ,அசுரர் - இடகலை,பிங்கலை(நாடி)

ஆமை - ஐம்புலன்களையும் அடக்கி ஆளும்தன்மை

தொண்டைக்குழி - விசுக்தி

விஷ்னு - வாழ்வு

ஆலகாலவிஷம் - கபம்

அமுதம் - நித்ய வாழ்வு 

(மரணமில்லா பெருவாழ்வு)

அதாவது முதுகுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை,பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று சதா ஓடிக்கொண்டிருக்கிறது.

(இதைத்தான் சிவவாக்கியர் சங்கிரண்டையும் தவிர்ந்து தாரை ஊதச் சொன்னார்)

ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக் கொண்டு வாசி யோகம் மூலம் இடகலை ,பிங்கலை வழியே மாற்றி மாற்றி 

மூச்சுக்காற்றை இழுக்கும்போது (நாடி சுத்தி) நித்யப் பெருவாழ்விற்கான அமுதம் சுரக்கும் அதை உண்டவர்கள் தேவர்கள் போல மரணமில்லா பெருவாழ்வு அடைவர்.

ஆனால் இந்தப்பயிற்சியின் போது அளவுக்கதிகமான கபமே முதலில் வெளிப்படும் 

ஆனால் பரம்பொருள் சிவனின் கருணையால் அந்த கபத்தை கலைத்துவிடும்.

(சந்தேகம் இருப்பின் வாசி யோகம் பயின்றவரிடம் கேட்டு தெளிவு பெறலாம்)''

- என்று விளக்கினேன்.அவரும் பாவம் வேறொருவருக்கு பாடம் எடுக்க சென்றுவிட்டார்.

விநாயகர் சக்தியின் அழுக்குருண்டையில் பிறந்தவராமே -என்று.


🌿🌿

அவர் கிடக்கட்டும்.உங்களுக்காக (புரிந்து கொள்ள நினைப்போருக்கு) 

மேலும் சில உருவகங்களின் Decodings...

🌷ஒரே இறைவன்(இஸ்லாம்) - அத்வைதம் (Oneness)

🌷சக்தி,சிவன் - துவைதம்(Duality)

🌷பிதா,சுதன்,பரிசுத்த ஆவி - விசிஷ்டாதுவைதம் (கிறித்துவம்)

- உருவகம்

🌷சும்மா இருந்தால் சிவம்(Static) 

🌷ஓயாமல் அசைந்தால் சக்தி(Dymnamic)

🌷சக்தி இல்லையேல் சிவம் இல்லை-உருவகம்

🌷திரிசூலம்-இச்சா சக்தி,கிரியா சக்தி,ஞான சக்தியின் உருவகம்

🌷கணபதியை(பூமி) சக்தி (Dynamic force)

அழுக்கை(Dust of universe )உருட்டி படைத்தாள்-இது பூமி தோன்றலின் உருவகம்.

🌷தில்லை நடராசர் நடனம்-Cosmic dance ன் உருவகம் (அறிவியல் ஏற்றுக்கொண்டது)

🌷சிவன் (யோக சக்தி),திருமால் (போகசக்தி)

இவற்றின் கலவையான சக்தியே ஐயப்பன்-உருவகம்.

🌷முப்பரிமாணம் மட்டுமே உணரக்கூடிய மனித மூளைக்கு நாலாவது பரிமானமான காலத்தை உணர்த்த மகாகாலன்,

அதன் எதிர்பரிமாணம் மகாகாளி - உருவகம்

🌷பிறப்பை அருளும் தாயின் உருவத்தை மரணத்தை அருளக்கூடிய கோர உருவமாக காளியாகபடைத்தது 

ஜனனமும்,மரணம் இறைவனக்கு ஒன்றே என உணர்த்தும் உருவகம்

🌷வாயு மைந்தன் அனுமன்(குரங்கு போன்ற நிலையில்லாத மனம் யோகம் பயின்றால் கடவுளாகும் தகுதி உண்டு என்ற தத்துவம்

- மனத்தின் உருவகம்

🌷கருடாழ்வார்-மூச்சின் உருவகம்

🌷சூரியனின் ஏழு குதிரைகள் நிறப்பிரிகை-VIBGYOR உருவகம்

🌷தசாவதாரம் பரிணாம வளர்ச்சியின் உருவகம்

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

🌷ஆணும் பெண்ணும் சமம் என உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் உருவகம்.

எல்லாம் உணர்ந்தோர் ஏதும் உணராதோர்க்கு தான் உணர்ந்ததை உணர்த்த ,

ஏதும் உணராதோர் உணர்ந்த தன்மையின் அடிப்படையில் தாம் உணர்ந்ததை (தத்துவத்தை) உருவகமாக்கி

உணர்த்தினர்.

நீங்களாவது உணர்ந்து கொண்டீரா?

உணர்ந்து கொண்டோர் பகிர்ந்து கொள்வர்.

Sunday, 4 October 2020

கடவுள் நமது சினேகிதன்

 சோ அவர்களின் எங்கே பிராமணன் கேள்வி பதிலிலிருந்து...

கேள்வி : ஒருவருக்காக இன்னொருவர் பிரார்த்தனை செய்தால், முதலாமவரின் குறைகளை கடவுள் களைந்து விடுவாரா?

சோ: ஹிந்து மதம், இறைவனை மிகவும் நெருக்கமானவராகப் பார்க்கிறது. ஹிந்து மதத்தில், கடவுளை நாம் அன்னியப்படுத்தி, எங்கோ வைத்து விடவில்லை. கடவுள் நமது சினேகிதன் மாதிரி. கடவுள் சினேகிதனா என்று கேட்டால், ஆமாம்!

மற்ற பல மதங்களைப் போல ஹிந்து மதம், கடவுளை எட்ட முடியாதவராக நினைக்கவில்லை. நண்பனாக, உறவினனாக; குருவாக, சீடனாக; தந்தையாக, மகனாக; சினேகிதனாக, காதலனாக; எஜமானனாக, வேலையாளாகப் பார்க்கப்படுகிறான் இறைவன்.

ஏனென்றால் உண்மையான பக்தனுக்கு அந்த உரிமை இருக்கிறது. பக்தி அவ்வளவு வலிமை உடையது.

இதனால்தான் கடவுளுக்கு கல்யாண உற்சவம் செய்து பார்க்கிறோம்; தாலாட்டி தூங்க வைக்கிறோம்; பாட்டு பாடி மேளம் கொட்டி, துயில் எழுப்புகிறோம்; நீராட்டுகிறோம்; புத்தாடை அணிவிக்கிறோம்.கடவுளுக்கும், பக்தியுள்ள மனிதனுக்கும் இவ்வளவு நெருக்கம் இருப்பதால், அவரிடம் உரிமை எடுத்துக் கொண்டு, இன்னொருவருக்காக வேண்டுகிறோம். இதை உண்மையான பக்தன் செய்கிறபோது அதற்கு பலன் கிடைக்கிறது.

நீங்கள் என் சினேகிதர். உங்களிடம், ஒருவருக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும். அவர் என்னிடமும் கூறி, உங்களிடம் கேட்டுக் கொள்ளச் சொல்கிறார். நான் உங்களிடம் அவருடைய காரியத்தை விளக்கி, அவருக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டு; அதனால் நான் சொல்கிற கோரிக்கையை நீங்கள் ஏற்கிறீர்கள். நீங்கள் ஒரு மனிதர். உங்களுக்கு இருக்கிற கருணை, இறைவனுக்கு இருக்காதா?

ஆதி சங்கரர் வரலாற்றில் வருகிற ஒரு அருமையான நிகழ்ச்சி இதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. சங்கரர் அப்போது சிறு பையன். பிரம்மச்சாரி. பிட்சைக்காக ஒரு வீட்டிற்குப் போகிறார். அந்த வீடோ, ஒரு பரம தரித்திரனுடைய வீடு. அந்த மனிதனும் வெளியே போயிருக்கிறான். வீட்டில் அவனுடைய மனைவி மட்டும் இருக்கிறாள்.

சங்கரர் ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று குரல் எழுப்ப, அந்த அம்மாள் செய்வதறியாமல் திகைக்கிறாள். ஏனென்றால், பிட்சை போடுவதற்கு வீட்டில் எதுவுமே இல்லை. வாயிலில் வந்து நிற்கிற பிரம்மச்சாரியோ, பெரும் தேஜஸ் உடையவராகக் காட்சியளிக்கிறான். வெறும் கையுடன், அந்தச் சிறுவனை திருப்பி அனுப்ப அந்தப் பெண்மணியின் மனம் இடம் கொடுக்கவில்லை. தவிக்கிறாள்.

உங்களைப் போன்றவர்களுக்கு தகுந்த உபசாரம் செய்பவர்கள் உண்மையிலேயே பாக்கியசாலிகள்’ என்று சங்கரரிடம் கூறிவிட்டு, அந்தப் பெண்மணி, வீட்டில் ஏதாவது இருக்காதா என்று தேடினாள். ஒரு பானையில், வாடிப் போன ஒரு நெல்லிக்கனி இருந்தது. அன்றைய பொழுதுக்கு அவர்கள் வீட்டில் அதுதான் உணவு; அவ்வளவு ஏழ்மை. கையில் கிடைத்த அந்த நெல்லிக்கனியை மிகவும் தயக்கத்துடனும், இவ்வளவு அற்பமான பொருளை பிட்சையிடுகிறோமே என்ற குற்ற உணர்வுடனும், அந்தப் பெண்மணி, சங்கரருக்கு பிட்சையாகத் தந்தாள்..

சங்கரர் நிலைமையைப் புரிந்து கொண்டார்; அந்தப் பெண்மணியின் நல்ல மனதையும் அவர் தெளிவாகவே தெரிந்து கொண்டார். அவளுக்காக அவர் மனம் இளகியது.

அந்தக் குடும்பத்தினரின் வறுமையை நீக்குமாறு, அவர் மனமுருகி, மஹாலக்ஷ்மியை வேண்டிக் கொண்டார்.

அப்போது அவர் துதித்த ஸ்லோகங்கள், ‘கனகதாரா ஸ்தோத்ரம்’ என்ற பெயரைப் பெற்றன. அவர் துதியைக் கேட்டு மகிழ்ந்த மஹாலக்ஷ்மி, அவர் முன் தோன்ற, சங்கரர் விழுந்து வணங்கி நிற்க, தேவி பேசினாள்:

‘குழந்தாய்! இவர்கள் முற்பிறவியில் எந்த நன்மையையும் செய்யவில்லை. அப்படியிருக்க, அவர்களிடம் நான் கருணை காட்ட வேண்டும் என்று நீ எதிர்பார்ப்பது எவ்வாறு?’சங்கரர் சொன்னார்: ‘தாயே! இப்போது இந்த நெல்லிக்கனி, இந்தப் பெண்மணியால் எனக்கு பிட்சையாக அளிக்கப்பட்டது. என் மீது கருணை வைத்து இந்த தானத்திற்கு நீ பலன் அளிக்கக் கூடாதா?’– இவ்வாறு சங்கரர் வற்புறுத்தி வேண்டிக் கொண்ட பிறகு, மனமிரங்கிய மஹாலக்ஷ்மி, தங்க நெல்லிக் கனிகளை மழையாகப் பொழியச் செய்து, அந்த வீட்டையே நிரப்பி விட்டாள். அந்தக் குடும்பத்தின் வறுமை நீங்கியது.இப்படி, சங்கரர் வேண்டிக் கொண்டபோது, ஏதோ ஒரு ஏழைக் குடும்பத்துக்கு தெய்வம் கருணை காட்டவில்லையா?

அதே போலத்தான், ""உண்மையான பக்தி உணர்வுடன்"" நமக்காக ஒருவர் வேண்டிக் கொண்டால், நமக்கு நன்மை கிட்டும்.